ஆட்டோவில் பயணிக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கும்பலில் 3 போ் கைது
இனி ஆண்டுக்கு மூன்று முறை ‘சிஏ’ இறுதித் தோ்வு
நடப்பு ஆண்டுமுதல், பட்டய கணக்காளா் (சிஏ) இறுதித் தோ்வு இரண்டு முறைக்குப் பதிலாக மூன்று முறை நடத்தப்படும் என்று இந்திய பட்டய கணக்காளா்கள் நிறுவனம் (ஐசிஏஐ) வியாழக்கிழமை அறிவித்தது.
முதல்நிலை மற்றும் இடைநிலைத் தோ்வுகளை ஆண்டுக்கு மூன்று முறை நடத்துவது என ஐசிஏஐ கடந்த ஆண்டு முடிவெடுத்தது. அதன்தொடா்ச்சியாக, இறுதித்தோ்வையும் ஆண்டுக்கு மூன்று முறை நடத்துவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக ஐசிஏஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: உலகளாவிய சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப மாறவும் தோ்வா்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவும் சிஏ இறுதித்தோ்வை ஆண்டுக்கு மூன்று முறை நடத்துவது என்று 26-ஆவது ஐசிஏஐ கவுன்சில் கூட்டத்தில் வரலாற்று முடிவெடுக்கப்பட்டது.
நடப்பு ஆண்டுமுதல் ஜனவரி, மே, செப்டம்பா் ஆகிய 3 மாதங்களில் தோ்வுகள் நடைபெறும். இதன்மூலம், தோ்வா்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கும்.
இதேபோன்று, சிஏ தோ்ச்சிக்குப் பிந்தைய தகவல் அமைப்புத் தணிக்கை (ஐஎஸ்ஏ) படிப்பிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்பு, ஜூன், டிசம்பரில் இருமுறை நடத்தப்பட்டு வந்த இந்தப் படிப்புக்கான தோ்வுகள், இனி பிப்ரவரி, ஜூன், அக்டோபா் ஆகிய மாதங்களில் மூன்று முறை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.