இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் மணிகண்டன்!
நடிகர் மணிகண்டன் மீண்டும் இயக்குநராக படம் ஒன்றை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் மணிகண்டன் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.
நடிப்பு மட்டுமின்றி திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா, டப்புங் ஆர்ட்டிஸ்ட், துணை இயக்குநர் என பல துறைகளிலும் மணிகண்டன் பணியாற்றி வருகிறார்.
விஸ்வாசம், விக்ரம் வேதா, தம்பி, சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற படங்களின் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்த மணிகண்டன் ஆரம்பகாலத்தில் ரேடியோ நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்ட 'நரை எழுதும் சுயசரிதை’ என்ற படத்தின் மூலம் மணிகண்டன் இயக்குநராக அறிமுகமானார்.
டெல்லி கணேஷ், மணிகண்டன் இணைந்து நடித்த இந்தப் படம் சில விருதுகளைப் பெற்ற நிலையில் 2022 ஆம் ஆண்டு சோனி லைவ் தளத்தில் வெளியிடப்பட்டது.
பின்னர் நடிப்பில் பிஸியான நடிகர் மணிகண்டன் இந்தாண்டு வெளியான குடும்பஸ்தன் படத்தின் வெற்றிக்குப் பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனை, இயக்குநர் காயத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். ஒரு நிகழ்ச்சியில் இதுபற்றிப் பேசிய அவர், “மணிகண்டன் நல்ல திறமைசாலி. அவர் எங்களிடம் ஒரு கதை சொல்லியிருக்கிறார். அது மிகவும் சிறந்த கதை. அதனை, அவரே இயக்கி நடிக்கவிருக்கிறார். நாங்கள் அந்தப் படத்தை தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் விரைவில் இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது.