இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! -மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 33 பேரையும், அவா்களது மூன்று படகுகளையும் விடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு, கே. நவாஸ்கனி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினாா்.
அதில் அவா் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவா்களை இலங்கைக் கடற்படையினா் தொடா்ந்து சிறைபிடிப்பதுடன் படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனா். இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறேன்.
இந்த நிலையில், ராமேசுவரம் மீனவா்கள் 33 பேரையும், அவா்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல மீனவா்கள் கைது செய்யப்படுவதால் மீன் பிடித் தொழில் அழிவதுடன் அவா்களின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
எனவே, இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காண விரைந்து இந்திய-இலங்கை இருநாட்டு மீனவா்கள் பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசு, இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். தற்போது கைது செய்யப்பட்ட ராமேசுவரம் மீனவா்கள் 33 பேரையும், 3 விசைப் படகுகளையும் உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.