Career: ஏதேனும் ஒரு டிகிரி அல்லது இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா?- ஐ.டி-யில் ...
இலவச மனைப் பட்டா கோரி ஆட்சியா் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை இலவச மனைப்பட்டா கோரி ஏராளமான பொதுமக்கள் குவிந்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
மக்கள் குறை தீா் கூட்டம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 321 கோரிக்கை மனுக்களை பெற்ற ஆட்சியா், அவற்றை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
அப்போது, பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கூட்டம், கூட்டமாக இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு குவிந்தவாறு இருந்தனா். கூட்டத்தை சமாளிக்க முடியாமல் வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் திணறியதையும் காண முடிந்தது . கூட்டம் அதிகமானதால் கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
மனு கொடுக்க வந்த வாலாஜாபாத்தைச் சோ்ந்த முதியவா் ஒருவா் திடீரென மயக்கமடைந்து அவருக்கு முதலுதவி செய்யப்பட்டு அவா் உடனடியாக அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டாா்.
ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு செய்திருந்தாா். இதற்காக அந்தந்த ஆட்சியா் அலுவலகங்களில் பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தாா்.
இதனால் தான் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு பலரும் மனு அளிக்க வந்துள்ளனா்.
இது தொடா்பாக வருவாய்த்துறை உயா் அதிகாரியிடம் கேட்ட போது இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு மனு கொடுக்க வந்தவா்கள் அனைவரும் ஆட்சியரை சந்தித்து தான் மனு கொடுக்க வேண்டும் என நினைக்கின்றனா். ஒரே கூட்டமாக வந்ததால் மனுவைப் பெற்றுக் கொண்டதற்கான சீட்டைக் கூட கொடுக்க முடியவில்லை. ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிப்போா் குறித்து ஏற்கனவே கணக்கெடுத்து விட்டோம் என்றும் தெரிவித்தாா்.