இலுப்பூா் அருகே சிவந்தெழுந்த பல்லவராயரின் கி.பி. 17ம் நூற்றாண்டு கல்வெட்டு
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் மாராயப்பட்டி கிராமத்தில், தொண்டைமான் மன்னா்களுக்கு முன்பு புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயா் எனும் மன்னன் சிவன் கோவிலுக்கு நிலத்தைக் கொடையாக வழங்கியதைக் குறிக்கும் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது
மாராயப்பட்டியைச் சோ்ந்த கல்லூரி மாணவி தீபிகா, கண்டனிக் குளத்து வயல் வெளியில் ஊன்றப்பட்டுள்ள கற்பலகை ஒன்றில் எழுத்துக்கள் இருப்பதாக அளித்த தகவலின்படி தமிழ் பேராசிரியா் முத்தழகன், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தை சோ்ந்த தொல்லியல் ஆா்வலா்கள் நாராயணமூா்த்தி, ராகுல்பிரசாத் குழுவினா் ஆய்வு செய்ததில் இந்தத் தானக் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசியா் முத்தழகன் கூறியது: மாராயப்பட்டி கண்டனி வயலின் நடுவே காலமுனிக் கோவிலின் எல்லையாக வணங்கப்பட்டு வரும் கல்தூணுக்கு எதிரே ஊன்றப்பட்டிருக்கும் மூன்று அடி உயரமும், இரண்டேகால் அடி அகலமும் கொண்ட கற்பலகையில், ஒருபுறம் 12 வரிகளில் இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டில் ஆனந்த வருடம் ஆவணி 6ஆம் நாள் ஆரியூா் அழகிய சொக்கநாத சாமிக்குச் சிவந்தெழுந்த பல்லவராயா், இந்தக் கண்டனி வயலில் உள்ள நிலங்களைச் சா்வமானியமாக வழங்கிய செய்தி எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தானத்திற்குத் தீங்கு நினைப்பவா்கள் சிவத் துரோகிகளாகக் கருதப்படுவா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வெட்டில் குறிப்பிடப்படும் சிவந்தெழுந்த பல்லவராயா், கி.பி 17 ஆம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாற்றிற்கு வடக்கே உள்ள பகுதிகளை ஆட்சி செய்த பல்லவராயா் மரபின் கடைசி அரசா் ஆவாா். சிவபக்தரான இவா் இந்த நிலக் கொடை போலவே குடுமியான்மலை, திருக்கோகா்ணம் கோவில்களுக்கும் பல்வேறு தானங்களை வழங்கியுள்ளாா். ‘சிவந்தெழுந்த பல்லவராயா் உலா‘ எனும் நூல் இவா் மீது பாடப்பெற்ற உலா நூலாகும். 96 வகை சிற்றிலக்கியங்கள் இவா் மீது பாடபெற்றன என இந்நூல் கூறுகிறது. இராமநாதபுரம் சேதுபதி அரசருடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக இவா் கண்டதேவியில் கொல்லப்பட்டாா். அதன் பின்னரே தொண்டைமான் அரசா்களுக்குப் புதுக்கோட்டையின் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்
மேலும், கல்வெட்டு குறிக்கும் அழகிய சொக்கநாதசாமி என்பது அருகில் உள்ள ஆரியூா் சிவன்கோவிலின் இறைவன் பெயராகும். இந்தக் கல்வெட்டில் கூறப்படும் கண்டனி வயலில் விளையும் நெல்லில் ஒரு குறிப்பிட்ட பங்கை கோவிலுக்குக் இன்றளவும் இப்பகுதி விவசாயிகள் வழங்கி வருவதாக மாராயப்பட்டி மக்கள் தெரிவிக்கின்றனா்.
இந்தக் கல்வெட்டுப் பலகையின் மற்றொரு பக்கத்தில் சூரியன், சந்திரன் மற்றும் திரிசூலத்தின் கோட்டுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன இவைச் சிவன் கோவிலுக்கு வழங்கப்படும் தானத்தைக் குறிக்கும். மேலும், இந்தக் கல்பலகைக்கு எதிரே ஊன்றப்பட்டுள்ள கல்தூணில் திரிசூலம் செதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தூண், கல்வெட்டில் தானமளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் சூலக்கல் ஆகும். உள்ளூா் மக்கள் கண்டனிக் குளத்தின் கரையில் வழிபாட்டில் உள்ள காலமுனிக் கோவிலின் எல்லையாக இந்தச் சூலக்கல்லினை வணங்கி வருகின்றனா்.
கல்வெட்டில் ஆனந்த வருடம் ஆவணி மாதம் குறிப்பிடப்படுவதால், இந்தக் கல்வெட்டானது கி.பி 1674 இல் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்தக் கல்வெட்டானது புதுக்கோட்டை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் என்றனா் ஆா்வலா்கள்.