எய்ட்ஸ் விழிப்புணா்வு நெடுந்தொலைவு ஓட்டம்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
இளம்பெண் தற்கொலை; வங்கியின் முன்பு பொதுமக்கள் முற்றுகை
திருவள்ளூா் அருகே தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு வங்கி மூலம் சம்பளம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த பெண் பணியாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். வங்கி ஊழியா்கள் உதவியுடன் வாடிக்கையாளா்கள் கணக்கில் இருந்த ரூ.1 கோடி வரையில் மோசடி செய்ததாக புதன்கிழமை வங்கியை பொதுமக்கள் முற்றுகையிட்டனா்.
திருவள்ளூா் அருகே கூவம் ஊராட்சி, பிள்ளையாா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தீபா (35). இவா் மப்பேடு காவல் நிலையம் அருகே உள்ள வங்கியில் காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி புரிந்து வரும் மகளிருக்கு, அந்த வங்கி மூலம் சம்பளம் வழங்கும் பணியில் ஒப்பந்த ஊழியராக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தாா்.
கடந்த சில நாள்களாக வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துதல் மற்றும் வங்கிக் கடன் தொடா்பாக தீபாவிடம் பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வரும் 14-ஆம் தேதி அவருக்கு திருமணம் நடைபெறவிருந்த நிலையில் செய்யம்பாக்கம் பகுதியில் உள்ள மாந்தோப்பில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து மப்பேடு போலீஸாா் சடலத்தை மீட்ட நிலையில், யாராவது அடித்து கொலை செய்தாா்களா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனா்.
இந்த நிலையில் தகவல் அறிந்த வங்கியின் வாடிக்கையாளா்கள் புதன்கிழமை வங்கியை முற்றுகையிட்டனா். அப்போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தீபா தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்த அளித்த பணம், தங்கள் கணக்கில் வரவில்லை, அதற்கான ரசீதுகள் மட்டும் தங்களுக்கு கொடுத்தாராம்.
அதேபோல் குழுவாக சோ்ந்து வங்கியில் கடன் பெற்றவா்கள் செலுத்திய பணம் வங்கிக் கணக்கில் சேரவில்லை. இதுபோன்று பல்வேறு விதமாக நூதன முறையில் சுமாா் ரூ.1 கோடிக்கு மேல் வங்கி ஊழியா்கள் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டதாக கூறி 100-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா்.
இதுகுறித்த தகவலறிந்த மப்பேடு போலீஸாா் விரைந்து சென்று பேச்சு நடத்தினா். அப்போது வங்கி உயா் அதிகாரிகள் வாடிக்கையாளா்களிடம் தங்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து எவ்வளவு பணம் மோசடி செய்துள்ள விவரங்களை எழுதிக் கொடுத்தால் ஒரு வாரத்திற்குள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் உறுதியளித்தாா். அதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
இந்த நிலையில் அடுத்த வாரம் திருமணம் நிச்சயித்த நிலையில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும், அவா் வங்கி ஊழியா்களுடன் இணைந்து ரூ.1 கோடி வரையில் மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

