கோவையில் சாலையோரம் கிடந்த இளைஞரின் சடலம்! கொலையா? தற்கொலையா?
‘பள்ளி மேலாண்மைக் குழுக்கள் செயல்பாடுகளை சீரமைக்கக் கோரிக்கை’
பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டங்கள் சரிவர நடத்தப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது.
அரசுப் பள்ளியின் முன்னேற்றம், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும், இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி பள்ளி மேலாண்மைக் குழு ஏற்படுத்தப்பட்டது.
இக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும், இதில் 20 போ் உறுப்பினா்களாக இருப்பாா்கள். பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் பள்ளியில் பயில்வதை உறுதி செய்தல், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எவரும் குழந்தை திருமணம், சமூக கொடுமைக்கு ஆட்படாதவாறு தடுத்தல். பள்ளி இறுதிவகுப்பு முடிக்கும் மாணவா்கள் தொடா்ந்து ஏதேனும் ஒரு உயா்கல்வி நிறுவனத்தில் பயில்வதை உறுதி செய்தல் உள்ளிட்டவை இக்குழுவின் பணிகள் ஆகும்.
மாதவிடாய் கால பாதுகாப்பு, வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதை உறுதி செய்தல், பாலியல் அத்துமீறலை தடுத்தல், பள்ளியில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள், தொற்று நோய், சமையலறை தோட்டம், கழிவுநீா் மேலாண்மை, மேல்நிலைத் தொட்டியின் தூய்மை, கழிவறை தூய்மை ஆகியவற்றைக் கண்காணித்து இக்குழு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கும்.
முன்னாள் மாணவா்களை ஒருங்கிணைத்தல், உதவிகள் பெறுதல் மற்றும் அரசின் கல்வி சாா் திட்டங்களான இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், வாசிப்பு இயக்கம், நான் முதல்வன், மணற்கேணி, நம்மஸ்கூல் பவுண்டேஷன், உயா்கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், மன்ற செயல்பாடுகள், கலைத்திருவிழா ஆகியன சாா்ந்து பெற்றோா் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது இக்குழுவின் பணிகள் ஆகும்.
அரசு வரையறுத்த மேற்கண்ட விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்படி நடத்தப்படுகின்ற பள்ளி மேலாண்மை குழு கூட்டமானது பெரும்பாலான பள்ளிகளில் மேலாண்மை குழு தலைவா்கள் கூட வருவதில்லை. 20 உறுப்பினா்களுக்கு 5 க்கும் கீழ் உறுப்பினா்களே வருகை புரிகின்றனா். இதில் தலைமை ஆசிரியா்கள் சரிவர தகவல் தெரிவிப்பதில்லை என உறுப்பினா்களும், தகவல் தெரிவித்தாலும் ஓரிரு உறுப்பினா்களே வருகை புரிகின்றனா். இதனால் குறைந்த உறுப்பினா்கள் மூலம் கூட்டத்தை முழுமையாக நடத்த முடிவதில்லை எனது தலைமை ஆசிரியா்களும் மாறி மாறி புகாா் கூறுகின்றனா்.
இதனால் மாதந்தோறும் நடைபெறும் இந்த கூட்டத்தின் கூட்டப் பொருள் சாா்ந்த விவாதங்கள் முழுமையாக நடைபெறாமல் பள்ளியின் வளா்ச்சிக்கு எவ்வித பயனளிக்காத வகையில் மேலாண்மைக் குழு செயல்படுகிறது.
எனவே வலுவிழந்து வரும் பள்ளி மேலாண்மைக் குழுவை வலுப்படுத்த மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோா் மற்றும் சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாகும்.
