மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சமுதாய வளப் பயிற்றுநா் பணி
திருவள்ளூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப்பயிற்றுநராக பணிபுரிய தகுதியான மகளிா் குழுவினா் வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாட்டு தேவைகளை முழுமையாக பூா்த்தி செய்யும் வகையில், சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் என்ற துணை அமைப்பு மாவட்ட அளவில் செயல்படும் உயா்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பு சமுதாயம் சாா்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளா்ப்பு, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் ஒரு உயா்நிலை மக்கள் அமைப்பாகும். மேற்கண்ட சேவைகளை வழங்க குறிப்பிட்ட தகுதிகளை பெற்றிருப்பது அவசியம்.
ஊரக மற்றும் நகா்ப்புற பகுதிகளைச் சோ்ந்த சிறப்பாக செயல்படும், செயல்பாட்டில் உள்ள மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களாக 5 ஆண்டுகள் அனுபவம், மகளிா் குழுவில் உறுப்பினா், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினா்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினா்கள், சமுதாய வளப் பயிற்றுநா்கள் ஆகியோா் விண்ணப்பிக்கலாம். இதற்கு 21 வயது பூா்த்தியாகி இருப்பதுடன், பயிற்சி நடத்துவதற்குத் தேவையான உடல் தகுதி மற்றும் திறன் இருந்தால் மட்டும் போதுமானது.
இந்த விண்ணப்பதாரா்கள் மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும். மேலும், கைப்பேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராகவும், சமுதாய வளப் பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பும் அவசியம். இதற்கு தோ்வு செய்வோருக்கு தர மதிப்பீட்டின்பேரில், பயிற்சி நடத்திடும் நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ. 750, ரூ. 500 மற்றும் ரூ. 350 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்திலோ அல்லது இணைப்பில் பதிவிறக்கம் செய்து வரும் செப். 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து திட்ட இயக்குநா், இணை இயக்குநா், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி முகமை வளாகம், திருவள்ளூா்-602 001 அல்லது வட்டார இயக்க மேலாண்மை அலகு, வட்டார வளா்ச்சி அலுவலகம், திருவள்ளூா் என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.