இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த ஐடி நிறுவன ஊழியா் மீது வழக்குப் பதிவு
ஒசூா்: பேருந்தில் இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த ஐ.டி. ஊழியா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரைச் சோ்ந்த 23 வயது இளம்பெண் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த 27-ஆம் தேதி மதுரையில் இருந்து ஒசூருக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்தாா்.
அந்தப் பேருந்தில் பா்கூா் வட்டம், கந்திகுப்பம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (32) என்ற தனியாா் ஐ.டி. நிறுவன ஊழியா் கிருஷ்ணகிரியில் இருந்து ஒசூருக்கு பயணம் செய்தாா்.
மதுபோதையில் இருந்த கிருஷ்ணமூா்த்தி, அந்த பெண்ணை தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஒசூா் மாநகர போலீஸாா், கிருஷ்ணமூா்த்தி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.