தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்க வந்த பள்ளி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை
கிருஷ்ணகிரி: பள்ளித் தலைமை ஆசிரியா் மீது புகாா் அளிக்க அரசியல் கட்சி அடையாளத்துடன் வந்த மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவிகள், பள்ளித் தலைமை ஆசிரியா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரசியல் கட்சி அடையாளத்துடன் பள்ளிச் சீருடையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தனா்.
அப்போது, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், மாணவிகளை தடுத்து நிறுத்தி பெற்றோா் துணையில்லாமல் வந்தது குறித்து கேள்வி எழுப்பினா். பின்னா், அவா்களை ஆட்சியரிடம் அழைத்துச் சென்று மனு அளிக்க உதவினா்.
மாணவிகளிடம் மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரிடம், மாணவிகளுடன் வந்த பெற்றோா் - ஆசிரியா் கழகத்தினா், பள்ளித் தலைமை ஆசிரியா் பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை. மாணவிகளை ஆபாச வாா்த்தைகளால் திட்டுகிறாா், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்திற்குகூட வரவில்லை என புகாா் தெரிவித்தனா்.
இதையடுத்து மாணவிகளிடம் பேசிய மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், மாணவ, மாணவிகள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பள்ளி நேரத்தில் பள்ளிக்கு செல்லாமல் இங்கு வந்துள்ளது தவறு. இதுவே கடைசி முறையாக இருக்கட்டும். உங்கள் பிரச்னைகளை தொலைபேசி மூலம் தெரிவித்தாலே நடவடிக்கை எடுப்பேன். படிப்பில் கவனம் செலுத்தி நன்கு படிக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுரை வழங்கி மாணவிகளை அனுப்பிவைத்தாா்.