பூண்டி ஏரிக்கான நீா்வரத்துக் கால்வாய் தூா்வாரி ஆழப்படுத்தும் பணி
ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடை: நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்!
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையை தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
‘ஸ்னாப் பேக்’ என்றழைக்கப்படும் அந்த நடைமுறை, ஈரானுடன் கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொண்டபோது வல்லரசுகளால் உருவாக்கப்பட்ட செயல்வடிவம் ஆகும். இந்த நடைமுறையை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்ய முடியாத வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை முழுமையடைந்தால், ஈரானின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்கப்படும்; ஈரானால் எந்த நாட்டுடனும் ஆயுத ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியாது. மேலும் ஈரான் பலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை நடத்தினால் அதற்காக தண்டனை விதிக்கப்படும்.
இது, ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ள ஈரானை மேலும் பாதிக்கும். ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கை, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் கொண்டு வர 30 நாள்கள் எடுத்துக்கொள்ளும். இந்த இடைவெளியில், ஈரான் தனது தீவிர ராஜீய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்புள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது ஐ.நா. கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. அவற்றை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் அமல்படுத்திவந்தன. இதனால், ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஈரானுக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனிக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஈரான் ஒப்புக்கொண்டது. அதற்குப் பதிலாக, ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.
எனினும், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது ஏற்படுத்தப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக, அவருக்குப் பின் வந்த டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். மேலும், ஒப்பந்தத்தின் கீழ் விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.
அதற்குப் பதிலடியாக, தாங்கள் அணு ஆயுதம் தயாரிக்கப்போவதில்லை என்பதை உறுதி செய்யும் வகையில் நிறைவேற்ற ஒப்புக்கொண்ட நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக மீறி வந்தது. அதன் ஒரு பகுதியாக, தனது யுரேனியம் செறிவூட்டும் திறனை ஈரான் படிப்படியாக அதிகரித்தது. மேலும், ஒப்பந்த வரம்பை மீறி 60 சதவீதம் வரை யுரேனியத்தை ஈரான் செறிவூட்டியது.
அணு ஆயுதம் வைத்திராத ஒரு நாடு, இந்த அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டுவது இதுவே முதல்முறை. இன்னும் கொஞ்சம் யுரேனியத்தை செறிவூட்டினால் (90 சதவீதம்), அதை அணு ஆயுத எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்பதால் இது தொடா்பாக ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்துவந்தன.
ஏற்கெனவே, ‘இன்னும் சில வாரங்களில்’ ஈரான் அணு குண்டை உருவாக்கிவிடும் என்றும் கடந்த 1990-களில் இருந்தே கூறிவரும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் அணுசக்தி திட்டங்களை நிரந்தரமாக முடக்கும் நோக்கில் அங்கு தாக்குதல் நடத்த உத்தரவிட்டாா். அதையடுத்து, ‘ஆப்பரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் இஸ்ரேல் கடந்த மாதம் 13-ஆம் தேதி தாக்குதல் நடவடிக்கை மேற்கொண்டது. இதில் ஈரானின் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி மையங்கள், ராணுவ நிலைகள் சேதமடைந்தன. ஈரானின் முப்படை தளபதி, சக்திவாய்ந்த துணை ராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு அதிகாரிகள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டனா்.
அதற்குப் பதிலடியாக, ‘ஆப்பரேஷன் ட்ரூ ப்ராமிஸ்-3’ என்ற பெயரில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஈரானும் ஏவுகணைகளை சரமாரியாக வீசி தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் பங்கேற்று அமெரிக்காவும் பங்கேற்று ஈரான் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பின்னா் 13 நாள் மோதலுக்குப் பிறகு போா் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலும் ஈரானும் ஒப்புக்கொண்டன.
ஆனால், தங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்காவுடன் புதிதாக நடத்திவந்த அணுசக்தி பேச்சுவாா்த்தையை ஈரான் நிறுத்தியது. மேலும், தங்கள் அணுசக்தி திட்டங்களைக் கண்காணிக்க ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான ஐஏஇஏ-வுக்கு அளித்துவந்த ஒத்துழைப்பை ஈரான் திரும்பப் பெற்றது.
அதையடுத்து, ஈரானின் அணுசக்தி திட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இது, 2015-ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளை நிறுத்திவைத்துள்ள ஐரோப்பிய நாடுகளை அச்சமடையச் செய்தது.
அதையடுத்து, ஆகஸ்ட் இறுதிக்குள் ஐஏஇஏ-வுக்கான ஒத்துழைப்பை மீண்டும் அளிக்கத் தொடங்கவும், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்கவும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு கெடு விதித்தன.
அந்தக் கெடு முடிவதற்கு இன்னும் மூன்று நாள்களே உள்ள நிலையில், ஸ்னாப் பேக் நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜொ்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் தற்போது அறிவித்துள்ளன.
இந்த அறிவிப்பை வெளியாவதற்கு முன்னரே, ஈரானின் ரியால் நாணய மதிப்பு வரலாற்று வீழ்ச்சியை நெருங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.