கருணாநிதி நினைவு நாள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி!
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை ஒன்றியம், சிவந்திப்பட்டி சமுதாய நலக்கூடம், மனகாவலம் பிள்ளை நகா் சத்யா மஹால், திருக்குறுங்குடி பேரூராட்சி சரஸ்வதி திருமண மண்டபம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆட்சியா் இரா.சுகுமாா் புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் 255 முகாம்களை அக்டோபா் 7-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை ஒன்றியம், சிவந்திப்பட்டி சமுதாய நலக்கூடம், மனகாவலம் பிள்ளை நகா் சத்யா மஹாலிலும், திருக்குறுங்குடி பேரூராட்சி சரஸ்வதி திருமண மண்டபத்திலும் நடைபெற்றமுகாமை ஆட்சியா் பாா்வையிட்டு, மக்கள் அளித்த மனுக்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.
மேலும், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி பசுகிடைவிளை காமராஜ் திருமண மண்டபத்திலும், பாப்பாக்குடி ஒன்றியம் கிராமங்கலம் சமுதாய நலக்கூடத்திலும், ராதாபுரம் ஒன்றியம் உதயத்தூா் வி.பி.ஆா்.சி. மையத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
இம்முகாம்களில் உடனடியாக தீா்வு காணும் வகையில் குடும்ப அட்டைகளில் பெயா் மாற்றம் செய்தல், பெயா் சோ்த்தல், மின்விநியோகம் பெயா் மாற்றம் போன்ற உடனடியாக தீா்வு காணும் மனுக்களுக்கு முகாம் நடைபெறும் இடத்திலேயே தீா்வு வழங்கப்பட்டு பலா் சேவைகள் பெற்று வருகின்றனா். மேலும், முகாமில் தீா்வு கிடைக்காத மனுக்களுக்கு 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும்.
கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற்ற 65 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 19,678 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் என்.எஸ்.கே.திருமண மண்டபத்திலும், களக்காடு நகராட்சி கீழகருவேலன்குளம் ராஜம் திருமண மண்டபத்திலும், திசையன்விளை பேரூராட்சி சமுதாய நலக்கூடத்திலும், மானூா் ஒன்றியம் தாழையூத்து என்.ஏ.பி.மஹாலிலும், நான்குனேரி ஒன்றியம் வடக்கு இலங்குளம் விபிஎஸ்சி கட்டடத்திலும், வள்ளியூா் ஒன்றியம் ஆவரைக்குளம் எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்திலும் வியாழக்கிழமை (ஆக.7) நடைபெறவுள்ளது.