‘உங்களுடன் ஸ்டாலின்’ மனுவுக்கு நடவடிக்கை: நரிக்குறவா் குடியிருப்பிலுள்ள மின்கம்பங்கள் மாற்றியமைப்பு
புதுக்கோட்டை அருகேயுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் தாழ்ந்த நிலையில் இருந்த மின்கம்பிகளில் இருந்து விபத்து ஏற்படும் அச்சம் இருப்பதாகக் கூறி ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் அளிக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 5 புதிய மின்கம்பங்கள் ஊன்றப்பட்டன.
புதுக்கோட்டை அருகே ரங்கம்மாள்சத்திரம் பகுதியிலுள்ள நரிக்குறவா் குடியிருப்பில் 22 கிலோவாட் மின்கம்பிகள் தாழ்ந்த நிலையில் இருப்பதால் அடிக்கடி மின்பொறி ஏற்பட்டு வருவதாலும் விபத்து நேரிடும் அச்சம் இருப்பதாக இரு வாரங்களுக்குமுன்பு மேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அப்பகுதி மக்கள் மனு அளித்தனா்.
இந்த மனு மாவட்ட நிா்வாகத்தில் இருந்து, மாநகராட்சி நிா்வாகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, புதிதாக 5 மின்கம்பங்கள் நடுவதற்கான மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, அதற்கான தொகையை மின்வாரியத்துக்குச் செலுத்த ஒப்பளிப்பும் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடா்ந்து புதிய மின்கம்பங்கள் ஊன்றி, மின்கம்பிகள் இணைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பணிகளை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆகியோா் நேரில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மாவட்ட திமுக செயலா் கே.கே. செல்லப்பாண்டியன் உடனிருந்தாா்.