பொது இடத்திலுள்ள மரத்தை வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள மரங்களை பசுமைக் குழுவின் அனுமதியின்றி வெட்டினால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க மாவட்ட பசுமைக் குழு முடிவு செய்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மாவட்ட பசுமைக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியரும் பசுமைக் குழுத் தலைவருமான மு. அருணா தலைமை வகித்தாா். பசுமைக்குழுவின் செயலரும் மாவட்ட வன அலுவலருமான சோ. கணேசலிங்கம் முன்னிலை வகித்தாா்.
மாவட்ட பசுமைக் குழு உறுப்பினா் ப. ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவின் அலுவல்சாா் உறுப்பினா்களான அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகளுக்காக மரங்களை அகற்றும்போது, ஒரு மரத்துக்கு 20 மரங்கள் நடவு செய்ய வேண்டும் என்ற நிலையில், அவ்வாறு மாற்றாக நடவு செய்யப்படும் இடங்களையும் பசுமைக் குழுவுக்கு காட்டி அனுமதி பெற வேண்டும் என்றும், பொது இடங்களில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால், ஒரு மரத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது.