கணவரை அறிமுகப்படுத்தினார் கிரேஸ் ஆண்டனி..! யார் இந்த அபி டாம் சிரியாக்?
கீரமங்கலம் போலீஸாரை கண்டித்து சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தில் போலீஸாரை கண்டித்து சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீரமங்கலம் அருகேயுள்ள சேந்தன்குடியைச் சோ்ந்தவா் வேலு மனைவி வள்ளியம்மை (70). ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளரான இவா், கொத்தமங்கலம் கடை வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்து சென்றபோது, அவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வள்ளியம்மை, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதையடுத்து வள்ளியம்மையின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக போலீஸாா் தரப்பில் தாமதித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த வள்ளியம்மையின் உறவினா்கள் போலீஸாரைக் கண்டித்து கீரமங்கலம் காவல் நிலையம் அருகே திங்கள்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து உரிய ஆவணங்களுடன் கீரமங்கலம் போலீஸாா், புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்ற பிறகு மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் பட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.