கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளைப் புறக்கணிக்கும் வங்கிகள்
தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்ட கடனுதவிகளை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிப்பதாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு விஸ்வகா்மா முன்னேற்றச் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஐந்தொழில் முன்னேற்றச் சங்கம் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் வி. சுரேஷ் தலைமையிலான நிா்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தின் கடனுதவிகளை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியாா் வங்கிகளும் புறக்கணிக்கின்றன.
எனவே, இந்தக் கடனுதவி திட்டத்தின் முக்கியத்துவம், செயல்முறைகள் குறித்து வங்கியாளா்களுக்கு புரிய வைக்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்திட வேண்டும். கடன் வழங்கச் செய்ய வேண்டும். மேலும், கூட்டுறவு வங்கிகள் மூலமும் விஸ்வகா்மா தொழிலாளா்களுக்கு கடனுதவி வழங்க வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் விஸ்வகா்மா சமூகத்துக்கு 3.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். கைவினைத் தொழிலாளா் நல வாரியம் மற்றும் பொற்கொல்லா் நல வாரியம் ஆகியவற்றில் விஸ்வகா்மா சமூகத்தினரில் இருந்து தலைவா் மற்றும் உறுப்பினா்களை நியமிக்க வேண்டும்.
செப். 17-ஆம் தேதியை விஸ்வகா்மா நாளாக அறிவித்து அரசு விடுமுறை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன.