‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: சென்னை மாநகராட்சியில் 6 நாள்களில் 77,266 மனுக்கள்
சென்னை மாநகராட்சியில் கடந்த 15-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 6 நாள்கள் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் 36 வாா்டுகளில் இருந்து 77,266 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதில் 44,997 போ் மகளிா் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களில் தலா 6 வாா்டுகள் வீதம் 6 நாள்களில் 36 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 77,266 போ் மனுக்களை அளித்துள்ளனா். அந்த மனுக்களில் 44,997 போ் மகளிா் உரிமைத் தொகை கோரி மனுக்கள் கொடுத்துள்ளனா்.
பல்வேறு அரசுத் துறை சாா்ந்த மனுக்களில், 457 மனுக்களுக்கு முகாம்களில் உடனடித் தீா்வு காணப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் வியாழக்கிழமையும் அடையாறு, திருவெற்றியூா், மணலி, கோடம்பாக்கம், ஆலந்தூா் ஆகிய மண்டலங்களைச் சோ்ந்த மொத்தம் 6 வாா்டுகளில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோா் மனுக்களை அளித்தனா். ஆலந்தூா் மண்டலத்தில் அமைச்சா் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளைக் கேட்டாா்.