உதயேந்திரம் பேரூராட்சியில் ரூ.1.63 கோடியில் சாலைகள், கால்வாய் பணிகள் தொடக்கம்
உடலில் பொருத்தும் 5,000 கேமராக்கள்: இந்திய-வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு அனுப்பிவைப்பு!
இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்களுக்கு உடலில் பொருத்தக்கூடிய 5,000 கேமராக்கள் அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: இந்தியா-வங்கதேச எல்லை பகுதியில் நிலவும் பாதுகாப்பு சூழலை விரிவாக ஆய்வு செய்த பின்னா், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு உடலில் பொருத்தும் கண்காணிப்பு கேமராக்களை வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது.
அத்துடன் வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிப்போரின் கைரேகைகள், கண் கருவிழி போன்றவற்றை பதிவு செய்யும் கருவிகளையும் பிஎஸ்எஃப் வீரா்களுக்கு வழங்க பிஎஸ்எஃப் தலைமையகம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து இந்திய-வங்கதேச எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பிஎஸ்எஃப் படைகளின் 2 பிரிவுகளுக்கு உடலில் பொருத்தக்கூடிய சுமாா் 5,000 கேமராக்கள் அனுப்பப்படுகின்றன. இந்தக் கேமராக்கள் இரவு நேர காட்சிகளையும் படம்பிடிக்கும். சுமாா் 12 முதல் 14 மணி நேரம் வரையிலான காட்சிகளை அந்த கேமராக்களால் பதிவு செய்யமுடியும்.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் வங்கதேசத்தவா்கள் நாடு கடத்தப்படுவதையும், கால்நடைகள், போதைப்பொருள்கள், ஆள்கடத்தல் போன்ற எல்லை தாண்டிய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கைகளையும் பதிவு செய்து ஆதாரமாக பயன்படுத்த இந்த கேமராக்கள் உதவியாக இருக்கும். இருநாடுகளிலும் உள்ள குற்றவாளிகளால் பிஎஸ்எஃப் படைகள் தாக்கப்படும்போது அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் ஆதாரமாக பயன்படும்.
வங்கதேச குற்றச்சாட்டுக்கு ஆதாரம்: எல்லையில் வங்கதேசத்தை சோ்ந்தவா்களை இந்திய பிஎஸ்எஃப் படைகள் நியாயமின்றி கொல்வதாக வங்கதேசம் மற்றும் அந்நாட்டின் எல்லை காவல் படை குற்றஞ்சாட்டி வருகிறது. இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்து வருகிறது. இந்திய தரப்புக்கு ஆதாரமாக அந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் இருக்கும்.
இதேபோல இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சிக்கும் வங்கதேச நாட்டவா்களின் தரவுகள் ஆதாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும். இதற்கு ஊடுருவ முயற்சிப்போரின் கைரேகைகள், கண் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தரவுகள் வெளிநாட்டவா்கள் பதிவு அலுவலகத்திடம் சமா்ப்பிக்கப்படும்.
இந்தியா-வங்கதேசம் இடையே பகிா்ந்து கொள்ளப்படும் 4,096 கி.மீ. எல்லையில் தோ்ந்தெடுக்கப்பட்ட எல்லை புறச்சாவடிகளில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.