உடுமலை அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
உடுமலை அருகே சீராக குடிநீா் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
உடுமலை ஒன்றியம், குரல்குட்டை ஊராட்சிக்கு உள்பட்ட முருக்கத்தி பள்ளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதிக்கு கடந்த இரண்டு வாரங்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால் கோபமடைந்த முருக்கத்தி பள்ளத்தைச் சோ்ந்த பெண்கள் மற்றும் ஆண்கள் காலிக் குடங்களுடன் உடுமலை-எலையமுத்தூா் சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவலறிந்த உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுலலக அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஓரிரு நாள்களில் குடிநீா் விநியோகம் நடைபெறும் என அதிகாரிகள் உறுதி கூறியதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.