உதவி ஆய்வாளரைக் கொன்றது ஏன்? விசாரணையில் தகவல்
உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்ற்கான காரணம் கொலையாளிகளின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
உடுமலையில் சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூா்த்தி (60), அவரது மகன்கள் தங்கப்பாண்டி (25), மணிகண்டன் (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இதில், விசாரணையின்போது போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற மணிகண்டன் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
மூா்த்தி, தங்கப்பாண்டியன் ஆகியோா் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், கொலையாளிகளின் வாக்குமூலம் குறித்து போலீஸாா் கூறியதாவது: தங்கப்பாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோா் மீது திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதனால், இருவரும் தலைமறைவாகி தந்தை மூா்த்தி உடுமலையில் தங்கி பணியாற்றி வந்த தோட்டத்துக்கு வந்துள்ளனா். இருவரும் அங்கேயே தங்கி பணியாற்றி வந்த நிலையில், சம்பவத்தன்று தந்தை, மகன்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேல், காவல் வாகன ஓட்டுநா் அழகுராஜா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்தபோது தாங்கள் தலைமறைவாக இருப்பது போலீஸாருக்கு தெரிந்துவிட்டால் சிக்கிக்கொள்வோம் என பயந்து சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலை வெட்டிக் கொலை செய்துள்ளனா் என்றனா்.
சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுவர எதிா்ப்பு: என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் கூறாய்வு செய்யப்பட்டு அவரது உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகேயுள்ள நாயக்கனூா் கிராமத்துக்கு சடலத்தைக் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்கு அந்தக் கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், திருப்பூா் மின் மயானத்திலேயே உடல் எரியூட்டப்பட்டது.