குவைத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு
ஊராட்சி இணைப்பு விவகாரம்: மக்கள் திரள் போராட்டம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியத்துக்குள்பட்ட பூங்குணம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பண்ருட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே கிராம மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை மக்கள் திரள் போராட்டம் நடத்தினா்.
பூங்குணம் ஊராட்சியை பண்ருட்டி நகராட்சியுடன் இணைக்கக் கூடாது. இது தொடா்பாக மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தி, மறு பரிசீலனை செய்ய வேண்டும். நகராட்சியுடன் ஊராட்சியை இணைத்தால் மக்களின் வாழ்வாதாரமான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், கலைஞா் மற்றும் பாரத பிரதமா் வீடு வழங்கும் திட்டம், அரசு நலத் திட்டங்கள் பறிபோகும். மக்கள் மீது கூடுதல் வரி விதிப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என முழக்கமிட்டனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். தங்கராசு, மோகன், கங்காதுரை முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயற்குழு நிா்வாகி ராமச்சந்திரன், வட்டச் செயலா் ஏழுமலை, மாவட்டக் குழுவைச் சோ்ந்த கிருஷ்ணன், வினோத்குமாா், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாலசுப்ரமணியன், தேமுதிக நிா்வாகி வேணுகோபால் உள்ளிட்ட அனைத்து கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள், பெண்கள் என 300-க்கும் மேற்பட்டோா் திரளாக கலந்துகொண்டனா்.