ஊராட்சிகளில் வளா்ச்சித் திட்டப் பணிகள் கலந்தாய்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் அதிதாரிகள் அனைவரும் கலந்து கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகள் தொடா்பாக கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, இந்த மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில், கலைஞரின் வீடு கட்டும் திட்டம், டங ஒஅஙஅச என்ற பழங்குடியினருக்கான இலவச வீடு திட்டங்களில் சரியான பயனாளிகள் தோ்வு செய்து வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த வீடுகள் அமைக்கும் பணிகள் அனைத்தும் தரமான கட்டுமான பொருள்களைக் கொண்டு கட்டடப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து ஆலோசனை வழங்குவது அவசியம். அதேபோல், கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் அதிகம் போ் இருந்தால் ஒவ்வொரு நாளும் மாற்றி, மாற்றி பணி வழங்கினால் அனைவருக்கும் வழங்க முடியும்.
அதில் கவனத்துடன் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் செயல்பட வேண்டும். அதேபோல் முதல்வா் சாலை விரிவாக்க திட்டம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு திட்டம், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அவா் விவாதித்தாா்.
அப்போது, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், உதவி திட்ட அலுவலா் சீனிவாசன், செயற்பொறியாளா் ராஜவேல், ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.