எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தி பெண்ணுக்கு வரதட்சிணை வன்கொடுமை!
சாஹரான்பூர்: வரதட்சிணைக் கொடுமையின் உச்சமாக இளம்பெண்ணுக்கு எச்ஐவி தொற்று ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சோனல் என்ற பெண்ணுக்கு உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருடன் திருமணமான நிலையில், மணமகனுக்கு வரதட்சிணையாக பணம், நகையுடன் கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துள்ளர் மணமகளின் தந்தை.
எனினும், இவை மட்டும் போதாது, வரதட்சிணை இன்னும் அதிகமாக தர வேண்டுமென மணமகனின் குடும்பத்தார் நிர்பந்தப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மணமகள் வீட்டார் தரப்பிலிருந்து கூடுதலாக ரூ. 25 லட்சமும், பெரிய ரக கார் ஒன்றையும் வாங்கித் தர வலியுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில், மேற்கண்ட நிபந்தனைகளை மணமகள் வீட்டார் நிறைவேற்றாத நிலையில், மணமகன் வீட்டில் புதுப்பெண்ணுக்கு மன ரீதியிலும் உடல் ரீதியிலும் பல்வேறு கொடுமைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அந்த பெண்ணை வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றிய மணமகன் வீட்டார், அதற்கு முன் அந்த பெண்ணின் உடலில் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ரத்தத்தையும் செலுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் தங்கள் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெண் வீட்டார் அளித்துள்ள புகாரின் அடிப்படையில், அந்த பெண்ணின் கணவர், கணவரின் சகோதரர் உள்பட நால்வர் மீது வரதட்சிணை வன்கொடுமை வழக்குப்பதிந்துள்ள காவல் துறை அதிகாரிகள் அவர்களிடன் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.