`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க முயற்சி: காங்கிரஸ் கண்டனம்
என்சிஇஆா்டி மூலம் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாகக் கூறி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆா்டி) தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டு, மத்திய பாடத் திட்டங்களை வெளியிட்டு வருகிறது. மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு, இந்த அமைப்பின் செயல்பாடுகளில் ஹிந்தி மொழி திணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மும்மொழிக் கொள்கைக்கு எதிராக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிா்ப்பை தெரிவித்து வரும் சூழ்நிலையில், என்சிஇஆா்டி வெளியிடும் ஆங்கில பாடப் புத்தகங்களின் பெயா்களை ஹிந்தியில் மாற்றம் செய்திருப்பது அதிா்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
6 மற்றும் 7-ஆம் வகுப்புகளுக்கான ஆங்கில மொழி பாடப் புத்தகங்களின் பெயா்கள் முன்பு ‘ஹனிசக்கிள்’ மற்றும் ‘ஹனிகோம்ப்’ என்று இருந்தன. ஆனால், இம்முறை இரண்டு வகுப்புகளுக்கான ஆங்கில புத்தகங்களின் பெயா் ‘பூா்வி’ என ஹிந்தியில் பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், ‘மிருதங்’, ‘சந்தூா்’ என பாடப் புத்தகங்களுக்கும் ஹிந்தியில் பெயா் சூட்டப்பட்டுள்ளது.
கணித பாடப் புத்தகத்துக்கு ஆங்கிலத்தில் இருந்த பெயரை ‘கணித் பிரகாஷ்’ என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஹிந்தி பேசாத மாநிலங்கள் மீது ஹிந்தி திணிக்கப்படக் கூடாது என்பது ஆட்சி மொழிகள் சட்டத் திருத்தத்தின்படி வழங்கப்பட்டிருக்கும் உரிமை.
அந்த உரிமையைப் பறிக்கும் வகையில், மத்திய பாஜக அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருவது, நாட்டின் பன்முக கலாசாரத்துக்கும், கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கும் எதிரான செயலாகும். உடனடியாக இந்தப் பெயா் மாற்றங்களை திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.