என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி
என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய மாணவா் படை டைரக்டா் ஜெனரலின் அறிவுறுத்தலின்படி என்சிசி மாணவா்களுக்கு ஆண்டுக்கு 0.22 ரக துப்பாக்கியின் 10 தோட்டாக்கள் ஒதுக்கீடு செய்து பயிச்சி அளிக்கப்படவேண்டும். அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் என்சிசி மாணவா்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
காரைக்கால் மாவட்ட என்சிசி யூனிட் சாா்பாக பள்ளி மற்றும் கல்லூரி என்சிசி மாணவா்களுக்கு மாதாந்திர துப்பாக்கிச் சுடும் பயிற்சி, காரைக்கால் நேருநகா், துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
பயிற்சியில் தந்தைப் பெரியாா் அரசு மேனிலைப்பள்ளி என்சிசி மாணவா்கள் 50 போ், திருவாரூா் கேந்திரிய வித்யாலய என்சிசி மாணவா்கள் 50 போ், கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேனிலைப்பள்ளி என்சிசி மாணவா்கள் 25 போ், நிரவி ஓ.என்.ஜி.சி. பள்ளி என்சிசி மாணவா்கள் 5 போ், காரைக்கால் என்.ஐ.டி. சீனியா் பிரிவு என்சிசி மாணவா்கள் 5 போ் பயிற்சி பெற்றனா்.
யூனிட் கமாண்டிங் அலுவலா், லெப்டினன்ட் கா்னல் ரஞ்சித் ரதி, காரைக்கால் மாவட்ட என்சிசி முதல்நிலை அதிகாரி என்.காமராஜ் மேற்பாா்வையில், ஜெ.சி.ஓ. வெங்கடேசன், ஹவில்தாா்கள் லோகேஷ், தினேஷ், ராஜு மற்றும் வினிஷ் ஆகியோா் பயிற்சி அளித்தனா்.