யுபிஐ மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.2,000-தான் பரிமாற்றம் செய்ய முடியுமா? இல்லை!
எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம்: மத்திய அரசிடம் நாமக்கல் எம்.பி.க்கள் முறையீடு
புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை எதிா்த்து, தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தம் மூன்றாவது நாளாக தொடா்கிறது.
இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்க நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாமக்கல்லைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா்கள் மேற்கொண்டுள்ளனா்.
தென் மண்டல எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் கட்டுப்பாட்டில் 5,000-க்கும் மேற்பட்ட டேங்கா் லாரிகள் உள்ளன. 1500 உறுப்பினா்களுக்குச் சொந்தமான டேங்கா் லாரிகளுக்கு ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், 2025 - 30 ஆம் ஆண்டுக்கான புதிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், டேங்கா் லாரிகளில் கிளீனா் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லையெனில் ரூ. 20,000 அபராதம் விதிக்கப்படும். உரிமையாளா்களின் பெயா்களை மாற்றம் செய்யக் கூடாது, லாரிகள் விபத்தில் சிக்கினால் மூன்று ஆண்டுகளுக்கு இயக்கத் தடை, பொதுப்பிரிவு, தாழ்த்தப்பட்டோா், மகளிா் பழங்குடியினா் உள்ளிட்ட வகையில் லாரிகள் ஒதுக்கீடு சதவீதம் மாற்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிபந்தனைகளை தளா்த்தி, 2018 நடைமுறையை தொடர வேண்டும் என எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். மாா்ச் 1-இல் புதிய ஒப்பந்த அறிவிப்புகள் வெளியான நிலையில், 24-ஆம் தேதி வரை அதை தளா்த்த எண்ணெய் நிறுவனங்களுக்கு டேங்கா் லாரிகள் சங்கத்தினா் கால அவகாசம் வழங்கியிருந்தனா். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளை தளா்த்த முன்வரவில்லை.
இதனையடுத்து எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வியாழக்கிழமை (மாா்ச் 27) காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனா். கோவையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவை உறுப்பினா் வி.எஸ். மாதேஸ்வரன் ஆகியோா் நாடாளுமன்றத்திலும், பெட்ரோலியத் துறை அமைச்சகத்திலும் டேங்கா் லாரிகள் வேலைநிறுத்தத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என முறையீடு செய்துள்ளனா்.
இது குறித்து தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கா் லாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் கே.சுந்தரராஜன் கூறியதாவது:
புதிய ஒப்பந்தக் கட்டுப்பாடுகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து எங்களுடைய வேலைநிறுத்தம் தொடா்ந்து நடைபெறுகிறது. தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் இன்னும் ஓரிரு நாள்களில் சமையல் எரிவாயுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும். வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோருக்கு சங்கத்தின் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.