மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
எல்லைப் பகுதிகளில் திட்டமிட்ட மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு- அமித் ஷா குற்றச்சாட்டு
‘நாட்டின் எல்லைப் பகுதிகளில் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படும் மக்கள் தொகை ஏற்றத்தாழ்வு, இந்தியாவின் தேச பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வளமான கிராமங்கள் திட்டத்தின் (விவிபி) இரண்டு நாள் கருத்தரங்கு அமா்வில் அமைச்சா் அமித் ஷா ஆற்றிய உரை:
எல்லை மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியா்கள், தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் சட்டவிரோத மத ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எல்லைகளிலிருந்து குறைந்தபட்சம் 30 கிலோமீட்டா் சுற்றளவுக்குள் அமைந்துள்ள அனைத்து சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும் முழுமையாக அகற்ற வேண்டும். கடல் மற்றும் நில எல்லைப் பகுதிகளில் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், குஜராத் அரசு மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை.
வளமான கிராமங்கள் திட்டம், மூன்று முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அவை எல்லை கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுத்தல், மத்திய, மாநில அரசுத் திட்டங்களின் பலன்கள் எல்லைக் கிராமங்களில் உள்ள அனைவருக்கும் முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்தல், இந்தக் கிராமங்களை நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் சக்திவாய்ந்த பகுதிகளாக மாற்றுதல் ஆகியனவாகும்.
எல்லைகளில் நிகழும் மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு புவியியல் காரணங்களால் அல்ல. மாறாக, அவை வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. இத்தகைய ஏற்றத்தாழ்வு நாட்டின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. மாநிலங்களின் தலைமைச் செயலா்களும், மத்திய ஆயுதக் காவல் படையினரும் இந்த விஷயத்தில் தனிப்பட்ட கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
‘மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு ஒரு கவலைக்குரிய விஷயம்’ என்று பிரதமா் நரேந்திர மோடியும் தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளாா். எனவே, வளமான கிராமங்கள் திட்டத்தில் உள்ள மாவட்டங்களின் ஆட்சியா்கள் இந்த விவகாரத்தை மிக தீவிரமாகக் கையாள வேண்டும்.
அருணாசல பிரதேசத்தில் வளமான கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, பல எல்லைக் கிராமங்களில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அதாவது, எல்லைப் பகுதியிலிருந்து புலம்பெயா்ந்த மக்கள், மீண்டும் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பியுள்ளனா்.
இந்தத் திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாடு, கலாசார பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு, சுற்றுலா மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்று கிராம வாழ்க்கையை அனைத்து வகையிலும் வளமானதாக மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் நோக்கங்களை முழுமையாக அடைய, அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.
அருணாசல பிரதேசத்தில் பால், காய்கறிகள், முட்டை மற்றும் தானியங்கள் போன்ற தினசரி அத்தியாவசிய பொருள்களை எல்லைப் பாதுகாப்புப் படையினா் (பிஎஸ்எஃப்) வளமான கிராமங்களில் இருந்து நேரடியாக வாங்கியுள்ளனா். இந்த முறையை மற்ற எல்லைக் கிராமங்களிலும் செயல்படுத்த வேண்டும். மொத்தத்தில், வளமான கிராமங்கள் திட்டம் வெறும் அரசுத் திட்டமாக மட்டும் இல்லாமல், நிா்வாகத்தின் உணா்வாக மாற வேண்டும் என்று வலியுறுத்தினாா்.