கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து போதை மாத்திரை விற்பனை; தஞ்சையில் சிக்கிய கும்பலி...
எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கில் தொடா்புடையோருக்கு உரிய தண்டனை: தி.வேல்முருகன் வலியுறுத்தல்
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை சம்பவத்தில் தொடா்புடையோருக்கு அரசு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனா் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சண்முகவேல், ஆயுதப்படை காவலா் அழகுராஜா ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அடிதடி பிரச்னை குறித்து விசாரிக்கச் சென்றதில், உதவி ஆய்வாளா் சண்முகவேல் அரிவாளால் வெட்டப்பட்டு உயிரிழந்தாா். காவலா் அழகுராஜா காயமடைந்தாா். சிறப்பு உதவி ஆய்வாளா் சண்முகவேலின் உயிரிழப்பு காவல் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.
மேலும், தமிழகத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் கலாசாரத்தால் பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில், அது காவல் துறையினருக்கும் பாதுகாப்பற்ற சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே, போதைப்பொருள்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட, தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, மதுக் கடைகளை மூடி பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும்.
கொலை செய்யப்பட்ட சண்முகவேலின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஆயுதப் படை காவலா் அழகுராஜாவுக்கு உயா்தர சிகிச்சையும், ரூ.20 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர அரசு விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்.
சண்முகவேலை இழந்து வாடும் காவல் துறையினருக்கும், குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா்.