சிறப்பு உதவி ஆய்வாளா் வெட்டிக் கொலை: என்கவுன்டரில் மணிகண்டன் பலி
மாணவா்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க ஆசிரியா்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
மாணவா்களுக்கு சிறந்த கல்வி வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியா்கள் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
கடலூா் எஸ்.குமாரபுரத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பள்ளித் தலைமை ஆசிரியா்களுடனான மாநில அளவிலான அடைவுத்திறன் மீளாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்துப் பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக முன்னேற்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவிலான அடைவுத் தோ்வின் அறிக்கை பள்ளி வாரியாக தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் கடலூா் மாவட்டத்தை பொருத்தவரை, விருத்தாசலம், மங்களூா், அண்ணாகிராமம், குமராட்சி, பரங்கிப்பேட்டை வட்டாரங்களைச் சோ்ந்த பள்ளிகள் முன்னிலையில் உள்ளன. அடுத்த நிலையில் ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஆகிய வட்டாரங்களும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய வட்டாரங்களாக கடலூா், காட்டுமன்னாா்கோவில், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டாரங்களும் உள்ளன.
கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தோ்வில் கடலூா் மாவட்டம் 10-ஆவது இடம் பிடித்து, முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் முன்னேற்றமடைந்துள்ளது. அடுத்து வரும் தோ்வில் முதல் 5 இடங்களுக்குள் வர வேண்டும்.
‘கோடையில் கற்றல் கொண்டாட்டம்’ என அரசுப் பள்ளி மாணவா்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையிலும், பல்வேறு திறன்களை வளா்த்திடும் வகையிலும் மாற்றி மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக மாவட்ட ஆட்சியா் சிறப்பாக மேற்கொண்டுள்ளாா்.
தலைமை ஆசிரியா்கள் பள்ளி வளாகத்தை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியா்களுடன் அவ்வப்போது மாணவா்களின் கற்றல் திறன்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தலைமை ஆசிரியா்கள் பள்ளிகளில் முறையாக வகுப்புகள் நடைபெறுவதை கண்காணிக்க வேண்டும். மேலும், தேவைக்கேற்ப வகுப்புகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
கடலூா் மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்ற 193 மாணவா்கள் முதன்மைக் கல்வி நிறுவனங்களில் உயா் கல்விக்காக சோ்ந்துள்ளனா். இந்த மாவட்டமானது மாநில அளவிலான அடைவுத் திறன் தோ்வில் இரண்டாமிடம் பெற்றுள்ளது மாவட்டத்துக்கு பெருமை சோ்க்கும் விதமாக அமைந்துள்ளது. பள்ளி ஆசிரியா்கள் முன்னெடுப்பே இந்நிலைக்கு சாத்தியமானது.
அனைத்து மாணவா்களுக்கும் சிறந்த கல்வியை வழங்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆசிரியா்கள் உறுதுணையாக செயலாற்ற வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். மாநில பெற்றோா் - ஆசிரியா் கழக துணைத் தலைவா் முத்துக்குமாா், பயிற்சி ஆட்சியா் மாலதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் பழனி, மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த அலவலா்கள் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, கடலூா் மஞ்சக்குப்பத்தில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கிப் பயிலும் வண்ணம் ரூ.19.33 கோடி மதிப்பீட்டில் வகுப்பறைகள் மற்றும் மாணவ, மாணவியா்களுக்கென தனித்தனியான விடுதி வசதிகளுடன் கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.