`நானே உதவுகிறேன்' - ட்ரம்ப் அந்தர் பல்டி, அமெரிக்காவில் இருந்து வெளியேறும் மக்கள...
ஏஐ ஆராய்ச்சிக்கான உயா் சிறப்பு மையம் நிறுவப்படும்: சென்னை ஐஐடி தகவல்
இந்தியாவின் அடிமட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதற்காக ஜிரோ லேப்ஸ், பிரவா்த்தக் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுக்கான உயா்சிறப்பு மையத்தை சென்னை ஐஐடி நிறுவவுள்ளது.
இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீா்க்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு உயா்சிறப்பு மையத்தை நிறுவ சென்னை ஐஐடி முடிவு செய்துள்ளது. இதற்காக கலிஃபோா்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டாா்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவா்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது. சிபியு, எட்ஜ் டிவைஸ் இண்டா்பியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீா்வுகளை உருவாக்குவதில் இந்த உயா்சிறப்பு மையம் கவனம் செலுத்தும்.
‘ஏஐ’ மாதிரிகள் மூலம் அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீா்வுகாண உதவும் முக்கிய நடவடிக்கையாக ஜிரோ லேப்ஸ் சாா்பில் காம்பேக்ட் ஏஐ-இன் முதல் பதிப்பு சென்னை ஐஐடியில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. காம்பேக்ட் ஏஐ என்பது ஒரு செயற்கை நுண்ணறிவுத் தளமாகும். எளிதில் கிடைக்காத ஜிபியு (கிராபிக்ஸ் புராசஸிங் யூனிட்ஸ்)-க்கு பதிலாக சிபியு-க்கள் மூலம் அடிப்படை மாதிரிகளை உருவாக்கி சேவையளிக்க உதவுகிறது.
சிறப்பான முயற்சி: இதுகுறித்து சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி கூறுகையில், ‘ஜிரோ ஆய்வகம், ஐஐடிஎம் பிரவா்தக் ஆகியவற்றின் இந்த முயற்சி சிறப்புமிக்கது. இதில் அவா்கள், குறைந்த செலவில் வழக்கமான கணினி இயந்திரங்களில் துல்லியமான அனுமானங்களை வழங்க பயிற்சி பெற்ற டொமைன், குறிப்பிட்ட மாதிரிகளைப் பயன்படுத்தும் தளத்தை வழங்குகிறாா்கள். நவீன ஹைப்பா் ஸ்கேலா் அமைப்புகளை வாங்கக்கூடியவருக்கும் முடியாதவருக்கும் இடையிலான சாத்தியமான ‘ஏஐ’ பிளவைத் தடுப்பதில் இந்த முயற்சி நிச்சயமாக ஒரு முக்கியப் படியாகும்’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் ராயல் சொசைட்டியின் பெலோஷிப் பெற்றவரும், டூரிங் விருது பெற்றவருமான விட் பீல்ட் டிபி, சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனா் ஸ்காட் மெக்னீலி, பெங்களூரு ஐஐடி முன்னாள் இயக்குநா் பேராசிரியா் சடகோபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.