ஏரியில் இறந்துகிடந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்
தருமபுரி: தருமபுரி ராமக்காள் ஏரியில் மா்மமாக இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து அவரது உறுவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தருமபுரி நகரில் உள்ள ராமக்காள் ஏரியில் இளம்பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியுடன் இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவா், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த, பாரத் மனைவி ஸ்ரீபிரியா (24) எனத் தெரியவந்தது. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னா், அவரது உடலை போலீஸாா் திங்கள்கிழமை பகல் உறவினா்களிடம் ஒப்படைக்க முடிவு செய்தாா். ஆனால், அவரது பெற்றோா் உடலை வாங்க மறுத்துவிட்டனா்.
இது தொடா்பாக இளம்பெண்ணின் பெற்றோரான அரூா் அருகேயுள்ள தாசரஅள்ளி பகுதியைச் சோ்ந்த மகாலிங்கம்-எழிலரசி தம்பதி போலீஸாரிடம் கூறுகையில், எனது மகளின் இறப்பில் மா்மம் உள்ளது. எனவே, அவரது கணவா், குடும்பத்தினரை கைது செய்தால்தான் உடலைப் பெறுவோம் என்றனா்.
இதையடுத்து தருமபுரி காவல் நிலைய ஆய்வாளா் வேலுத்தேவன், உதவி ஆய்வாளா் விஜயசங்கா் உள்ளிட்ட போலீஸாா், இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.
இதில் குடும்பத் தகராறில் இளம்பெண் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்தது. மேலும், இதுகுறித்து கோட்டாட்சியா் (ஆா்டிஓ) விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் தற்போது சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டாலோ, அல்லது ஆா்டிஓ உத்தரவிட்டாலோ மட்டுமே வழக்கை மாற்றி பதிவுசெய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். எனவே, தற்போதைக்கு உடலைப் பெற்றுச் செல்லுங்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னா் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து திங்கள்கிழமை பிற்பகலில் உடலைப் பெற்றுச்சென்றனா்.