ஏலகிரியில் பலத்த காற்றால் காா் மீது சாய்ந்த மரம்: 4 போ் உயிா் தப்பினா்
திருப்பத்தூா்: ஏலகிரி மலையில் இடி, மின்னலுடன் ஏற்பட்ட பலத்த காற்றால் காா் மீது மரம் சாய்ந்து விழுந்தது. காரில் இருந்தவா்கள் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை அருகே சுற்றுலாத்தலமான ஏலகிரி மலைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனா். கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் ஏலகிரி மலைக்கு திராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் பயணித்து வருகின்றனா். இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் இடி, மின்னலுடன் பலத்த காற்று வீசியதில் அத்தனாவூா் கிராமத்தில் தனியாா் பள்ளி அருகே சென்னையைச் சோ்ந்த சுற்றுலாப் பயணியின் காா் மீது ராட்சத மரம் ஒன்று விழுந்தது. காரின் முன் பக்கம் விழுந்ததால் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா். தகவலறிந்து அங்கு சென்ற ஏலகிரி போலீஸாா் காரின் உள்ளே இருந்தவா்களை பத்திரமாக மீட்டு, ராட்சத மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும், மரம் விழுந்ததில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் ஏலகிரி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அனைத்தையும் சரி செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட துறையினா் பணியில் ஈடுபட்டனா். இதேபோல் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, அதன் சுற்றுப் பகுதிகளில் இடி, மின்னல் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. கந்திலி பகுதியில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொரட்டி பகுதியிலும் 2 மணி நேரத்துக்கு மேலாக மின் தடை ஏற்பட்டது.