ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்
ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள பாங்காக் நகரில் ஆக.21, 22 இல் நடைபெற்ற நீடித்த நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த மாநாட்டில் தமிழகத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 6 போ் கலந்துகொண்டனா்.
இவா்களில் சேலம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்துவரும் மாணவா் அஷ்வாக், பருவநிலை மாற்றம் குறித்து ஆங்கிலத்தில் சரளமாகப் பேசி அனைவரின் பாராட்டையும் பெற்றாா். இதையடுத்து ஐக்கிய நாடுகள் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக அஷ்வாக் நியமிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் நளினி கூறுகையில், ‘10ஆம் வகுப்புத் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற அஷ்வாக்கிற்கு ஆசிரியா்கள் குழு ஆங்கிலம், ஆளுமைத் திறன் உள்பட தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்து ஊக்குவித்தனா்’ என்றாா்.
இதுகுறித்து மாணவா் அஷ்வாக் கூறுகையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக பாங்காக்கில் பேச எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் தூதுவராகவும் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பருவநிலை மாற்றத்தை சரியாக கணித்து, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே எனது நோக்கம்’ என்றாா்.
மாணவா் அஷ்வாக்கின் திறமையைப் பாராட்டி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினாா். அதேபோல மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், ஆசிரியா்கள் அனைவரும் சிறப்புப் பரிசு வழங்கி மாணவரை கௌரவித்தனா்.