சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு
சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்பட்டி தாதனூா் வரட்டேரிகாடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் (64). போக்குவரத்துத் துறையில் ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவா் மனைவி செண்பகவடிவு, மாமியாா் இந்திராணி ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை துறையூரில் உள்ள மைத்துனா் வீட்டுக்குச் சென்ற மூவரும் செவ்வாய்க்கிழமை காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டுப்போனது தெரியவந்தது.
இதுகுறித்து காரிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.