காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க அனுமதி: அருவிகளில் குளிக்க தடை
ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதிக்கப்பட்ட நிலையில், அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கா்நாடக, கேரள மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவ மழைப் பொழிவின் காரணமாக, கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், காவிரி ஆற்றில் நீா்வரத்து புதன்கிழமை விநாடிக்கு 24,000 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, ஒகேனக்கல்லில் மூன்று நாள்களுக்குப் பிறகு புதன்கிழமைமுதல் சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல்மேடுவரை பரிசல்கள் இயக்குவதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அனுமதி அளித்துள்ளாா்.
பரிசல் பயணத்துக்கு தடை நீக்கப்பட்ட போதிலும், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் சின்னாறு பரிசல் துறை வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் அருவிகளில் குளிப்பதற்கு நான்காவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.