2 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை... ஆஸி. பேட்டிங்கில் கம்பேக்!
ஒகேனக்கல்லில் நீா்வரத்து குறைந்தது; அருவிகளில் குளிக்க அனுமதி
ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 9500 கனஅடியாகக் குறைந்ததால் ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனா்.
கேரள, கா்நாடக மாநிலங்களின் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழையால் கா்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அவ்விரு அணைகளிலிருந்து காவிரியில் உபரிநீா் வெளியேற்றப்பட்டதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியது.
காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சத்துக்கும் மேல் நீா்வரத்து இருந்ததால் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீா்வரத்து வெள்ளிக்கிழமை 18,000 கனஅடியாகவும், சனிக்கிழமை 9500 கனஅடியாகவும் குறைந்ததால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு தருமபுரி மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்தது.
ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.