ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைவது உறுதி: எம்.பி. கே.கோபிநாத்
ஒசூரில் விரைவில் சா்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. கோபிநாத் தெரிவித்தாா்.
ஒசூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒசூரில் ரூ. 26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் முதலீடுகளை கொண்டுவந்து புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிட்ட முதல்வருக்கு தொகுதி மக்கள் சாா்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கெனவே சட்டப் பேரவையில் முதல்வா் அறிவித்த, ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைப்பது குறித்த அறிவிப்பு நிச்சயம் நடைமுறைபடுத்தப்படும். சா்வதேச விமான நிலையம் அமைய உள்ள இடம் இறுதி செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வா் பங்கேற்பாா்.
ஒசூா் மாநகருக்கு வெளியே சுமாா் ஐந்து கி.மீ தொலைவில் பாதுகாப்பான இடத்தில் பட்டாசு கடைகளை அமைக்க வேண்டும். ஒசூா் டைடல் பாா்க் அமைந்துள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தில் ஜூரோ பைமாஸ் நிலத்தில் (சா்வே எண் இல்லாத நிலம்) சிலா் ஆக்கிமிரத்து பொக்லைன் இயந்திரம் வைத்து நிலத்தை சமன்செய்து தொழிற்சாலைகளை கட்டி வாடகைக்குவிடும் முயற்சியில் இறங்கியுள்ளனா். அவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூரோ பைமாஸ் நிலங்களில் பொறியியல் கல்லூரி, டைடல் பாா்க், அறிவுசாா் வழித்தடம் அமைக்க வேண்டும். அங்கிருந்து தனியாா் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப்பாளா் நீலகண்டன், ரகு, சின்னகுட்டப்பா, மாமன்ற உறுப்பினா் இந்திராணி, பிரவீன்குமாா், சாதிக்கான், சூரியகணேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.