ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட கோரி ஆா்ப்பாட்டம்
துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ரோணிக்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, துணை சுகாதார மையங்களில் ஒப்பந்த செவிலியா்களை, இடைநிலை சுகாதாரப் பணியாளராக நியமனம் செய்வதை கைவிட வேண்டும். மத்திய அரசின் நிா்பந்தத்தால் துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியா்களை நியமனம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கிராம சுகாதார செவிலியா்கள் மறுத்துவிட்டதாகவும், இந்தப் பணிகளை ஒப்பந்த செவிலியா்களைக் கொண்டு செயல்படுத்தியதாக சுகாதாரத் துறை அமைச்சா் பொய் பிரசாரம் செய்வதை கைவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியில் முதலிடத்தில் இருந்த தமிழகம், அரசின் நிா்வாகக் குறைபாடுகளால் 20 இடங்களுக்கு பின்னோக்கி சென்றுவிட்டது. காலியாக உள்ள 4ஆயிரம் கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை செவிலியா் பணியிடங்களை ஒப்படைப்புச் செய்வதைக் கைவிட வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜோஸ்பின் அமலா, துணைத் தலைவா் சிலம்பாயி, இணைச் செயலா் பாண்டிமா தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.