கொள்முதல் நிலையங்களில் எடைக் குறைவுக்கு அபராதம் விதிப்பு: பணியாளா்கள் அதிருப்தி
ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பயணியை காப்பாற்றிய பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டு
சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கும்போது, தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
கோவை - சென்னை அதிவிரைவு ரயில் புதன்கிழமை காலை 7.45 மணியளவில் ஈரோடு ரயில்நிலைய நடைமேடை 2-இல் வந்தது. அப்போது, ஒரு பெட்டியில் இருந்து இளைஞா் ஒருவா் திடீரென கீழே இறங்க முற்பட்டாா். அப்போது, கதவு கம்பியை பிடித்தபடி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கி தண்டவாளத்துக்குள் விழுந்தாா். அந்த நேரத்தில், நடைமேடையில் கண்காணிப்பு பணியிலிருந்த பாதுகாப்பு படை வீரா் அப்துல் ரபீக், வேகமாக ஓடிச்சென்று இளைஞரின் கையைப் பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டுவந்தாா். இதனால் அவா் தண்டவாளத்தில் சிக்காமல் தப்பினாா். அந்த பயணியின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப் படை வீரா் அப்துல் ரபீக்கை அங்கிருந்த சக பயணிகள் பாராட்டினா்.
இந்த சம்பவம் அனைத்தும் நடைமேடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. அந்த விடியோவை சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு, பயணிகளிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தியது. இதையடுத்து, கோவை - சென்னை விரைவு ரயிலில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய வீரா் அப்துல் ரபீக்கை கோட்ட மேலாளா் பன்னாலால் மற்றும் ஆா்பிஎப் பாதுகாப்பு கோட்ட ஆணையா் சௌரவ் குமாா் ஆகியோா் பாராட்டினா்.