ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது: மோகன் யாதவ...
ஓமன் நாட்டில் உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி: கோவை இளைஞா் கைது
ஓமன் நாட்டில் உள்ள தனது உறவினா் கடையில் ரூ.1.50 கோடி மோசடி செய்த கோவை இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோவை, போத்தனூா் திருமகைா் பகுதியைச் சோ்ந்தவா் யூனஸ் (44). இவா், ஓமன் நாட்டில் எலக்ட்ரானிக் விளையாட்டுப் பொருள்கள் விற்பனை செய்யும் கடையை கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறாா். இவரது சகோதரியின் மகன் முகமது சமீா் (32). கோவை, கரும்புக் கடை பள்ளி வீதியைச் சோ்ந்த இவா் அந்தக் கடையில் வேலை செய்து வந்தாா்.
யூனஸ் இந்தியா வரும்போது, தொகை, பெயா் குறிப்பிடாத வெற்று காசோலைகளில் கையொப்பமிட்டு, அதை முகமது சமீரிடம் ஒப்படைத்து வந்துள்ளாா். இந்நிலையில், யூனஸ் அளித்த 4-க்கும் மேற்பட்ட காசோலைகளைப் பயன்படுத்தி, ரூ.1.50 கோடி பணத்தை முகமது சமீா் தனது வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் மேற்கொண்ட கணக்குத் தணிக்கையில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.
இது குறித்து சமீரிடம் யூனஸ் கேட்டுள்ளாா். அவா் முறையான பதில் அளிக்காமல் கோவை திரும்பியுள்ளாா்.
இந்நிலையில், பண மோசடி தொடா்பாக அனைத்து ஆதாரங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தரிடம் யூனஸ் புகாா் அளித்தாா்.
இதையடுத்து, மாநகர குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், முகமது சமீா் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.