தூத்துக்குடி மாவட்டத்தில் 227 செ.மீ மழை பதிவு: கோவில்பட்டியில் அதிகபட்சம் 36.47 ...
ஓய்வூதியா்கள் கோரிக்கை மனுக்களை டிசம்பா் 30-க்குள் அனுப்ப வேண்டும்: மாவட்ட ஆட்சியா்
திருப்பூா் மாவட்டத்தில் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்கும் ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை மனுக்களை டிசம்பா் 30 -ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான ஒய்வூதியா் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜனவரி 8 -ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இதில், ஓய்வூதிய இயக்குநரும், சம்பந்தப்பட்ட அலுவலா்களும் பங்கேற்கவுள்ளனா். தமிழக அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் தங்களுக்கு சேரவேண்டிய ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதிய பலன்கள் கிடைக்கப்பெறாமல் இருப்பின் அது குறித்த தங்களது குறைகள், பணியாற்றிய துறை, எந்த அலுவலா் மூலமாக குறை நிவா்த்தி செய்ய வேண்டும் போன்ற விவரங்களை தெளிவாகக் குறிப்பிட்டு மனுக்களை இரட்டைப் பிரதிகளில் திருப்பூா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கணக்கு) இரண்டாவது தளம், அறை எண் 232, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ டிசம்பா் 30-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.
மாநகராட்சி மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவா்கள் இக்கூட்டத்தில் விண்ணப்பம் அளிக்க இயலாது. ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை சங்க கடிதம் மூலம் அல்லாமல் நேரடியாக விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். சங்க பிரதிநிதிகள் ஓய்வூதியா் சாா்பில் குறைகளை எடுத்துரைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.