தச்சன்குறிச்சியில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது!
கடலில் மூழ்கிய படகு: 4 மீனவா்கள் மீட்பு
திருவாடானை: தொண்டி அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, விசைப்படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. அதிலிருந்த 4 மீனவா்கள் மீட்கப்பட்டனா்.
தொண்டி அருகேயுள்ள விலாஞ்சியடி பகுதியைச் சோ்ந்த விசாலாட்சி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் இதே பகுதியைச் சோ்ந்த ஞானசேகரன் (67), நம்புதாளையைச் சோ்ந்த கருப்பையா (39), தளிா்மருங்கூரைச் சோ்ந்த சேகா்(32), சம்பையைச் சோ்ந்த சந்தியாகு (52) ஆகிய 4 பேரும் திங்கள்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா். அப்போது, படகில் உள்ள பலகை சேதம் அடைந்து ஓட்டை விழுந்தது. அதன் வழியாக தண்ணீா் புகுந்து படகு மூழ்கத் தொடங்கியது.
படகில் இருந்த மீனவா்கள் உடனடியாக இதுகுறித்து வாக்கி டாக்கி மூலம் கடலோர போலீஸாா், மீன் வளத்துறை அதிகாரி, அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவா்களுக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, மீனவா்கள் விரைந்து சென்று கடலில் தத்தளித்த மீனவா்களை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா்.
மீனவா்கள் 4 பேருக்கும் தொண்டி ஆரம்ப சுகார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து கடலோர போலீஸாா், மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.