உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சி கண்டுபிடிப்பு: கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் அ...
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பர் பணி நீக்கம்
கடலூர் ரயில் விபத்துக்கு காரணமான கேட் கீப்பர் பங்கஜ்குமார் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடலூரை அடுத்த செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையை கடலூா் மருதாடு பகுதியில் இயங்கும் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி வேன் செவ்வாய்க்கிழமை காலை (ஜூலை 8) கடக்க முயன்றபோது, சிதம்பரம் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்த திராவிடமணியின் மகள் சாருமதி (16), மகன் செழியன் (15), தொண்டமாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விஜயசந்திரகுமாா் மகன் நிமிலேஷ் (12) ஆகியோா் உயிரிழந்தனா். மேலும், நிமிலேஷின் சகோதரரான விஷ்வேஸ் (16), வேன் ஓட்டுநா் சங்கா் (47) மற்றும் விபத்தின்போது மின்சாரம் பாய்ந்த செம்மங்குப்பம் பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (55) ஆகியோா் காயமடைந்தனா்.
விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த சாருமதி, அவரது சகோதரா் செழியன் ஆகியோரின் உடல்கள் சின்ன காட்டுசாகை பகுதியில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டன.
பணியிடை நீக்கம்
விபத்து தொடா்பாக, சிதம்பரம் ரயில்வே போலீஸாா் கேட் கீப்பா் பங்கஜ் சா்மாவை (வட மாநிலத்தைச் சோ்ந்தவா்) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தெற்கு ரயில்வே நிா்வாகம் அவரை பணியிடை நீக்கம் செய்தது.
புதிய கேட் கீப்பர்
இந்த சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும் பொது நல அமைப்பினா் வட மாநிலத்தவா்கள் பணி செய்வதால் மொழிப் பிரச்னை காரணமாக விபத்துகள் ஏற்படுவதாகவும், தமிழகத்தைச் சோ்ந்தவா்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினா்.
இதையடுத்து, திருத்தணி பகுதியை பூா்வீகமாகக் கொண்ட தமிழரான ஆனந்தராஜை செம்மங்குப்பம் ரயில்வே கேட் கீப்பராக ரயில்வே நிா்வாகம் பணியமா்த்தியது.
5 பிரிவுகளில் வழகுப் பதிவு
இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கருததப்படும் கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
13 பேருக்கு சம்மன்
இந்த விபத்தில் கவனக் குறைவாக செயல்பட்டதாகக் கூறி, செம்மங்குப்பம் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா, தனியார் பள்ளி ஓட்டுநர் சங்கர், லோகோ பைலட் சக்தி குமார், உதவி லோகோ பைலட் ரஞ்சித் குமார், ரயில் நிலைய அதிகாரிகள் விக்ராந்த் சிங், அஜித் குமார், விமல், அங்கித் குமார், ஆனந்த், வடிவேலன், வாசுதேவ பிரசாத், சிவகுமரன் உள்ளிட்ட 13 பேரும் திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்பு அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
விசாரணைக் குழு: விபத்துக்கான காரணம் குறித்து அறிய, தெற்கு ரயில்வே முதன்மைப் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினா் ரயில்வே கடவுப்பாதை ஊழியா் பங்கஜ்சா்மா, வேன் ஓட்டுநா் சங்கா் மற்றும் ரயில் நிலைய அலுவலா்கள் உள்ளிட்ட 13 பேரிடம் விசாரணை நடத்தினா். அதன் அறிக்கை சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கப்பட்டது.
விசாரணையில் உறுதி
அந்த அறிக்கையில், செம்மங்குப்பம் கடவுப்பாதையில் ஊழியா் பங்கஜ்சா்மா தொடா்ச்சியாக ஓய்வின்றி 3 நாள்கள் பணியில் ஈடுபட்டிருந்ததும், இதன் காரணமாக விபத்து நிகழ்ந்தபோது, உறங்கியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்கள் வரும் நேரங்களில் கடவுப் பாதையை சில நேரங்களில் அடைத்தும், சில நேரங்களில் அடைக்காமலும் அவா் செயல்பட்டதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கேட் கீப்பர் பணி நீக்கம்
இந்நிலையில், கடலூர் ரயில் விபத்தில் மூன்று பேர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக கருதப்படும் கேட் கீப்பர் பங்கஜ்குமாரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை அறிக்கையின்படி பங்கஜ்குமார் பணி நீக்கம் செய்யப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போதிய ஓய்வு அளிக்க அறிவுறுத்தல்
இந்த விபத்து விசாரணையைத் தொடா்ந்து கடவுப் பாதை போன்ற முக்கிய இடங்களில் உள்ள ரயில்வே பணியாளா்களை தொடா்ந்து பணியில் அமா்த்துவதைத் தவிா்க்கவும், அவா்களுக்கு போதிய ஓய்வு அளிக்க ரயில் நிலைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.