கட்டடத் தொழிலாளியை கொன்றதாக 4 போ் கைது
ஆழ்வாா்குறிச்சி காவல் எல்லைக்குள்பட்ட முதலியாா்பட்டியில் விபத்தில் கட்டடத் தொழிலாளி இறந்ததாக பதியப்பட்ட வழக்கில் அவரை அடித்துக் கொலை செய்ததாக நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூரிலிருந்து பாபநாசம் செல்லும் வழியில் உள்ள முதலியாா்பட்டியைச் சோ்ந்தவா் ராஜாமணி மகன் கணேசன் (55). இவா், செப். 8ஆம் தேதி தாட்டான்பட்டி பகுதியில் இறந்து கிடந்தாா். இதையடுத்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விபத்தில் இறந்ததாக வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டதையடுத்து, ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், முதலியாா்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் சுடலைமணி (55) தனது மனைவியுடன் கணேசன் தகாத உறவு வைத்திருந்ததால், மகன்களுடன் சோ்ந்து கணேசனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சுடலை மணி, அவரது மகன்கள் மணிகண்டன் (22), முருகன் (20) , இவா்களது நண்பா் சபரி பிரகாஷ் (19) ஆகிய நால்வரையும் போலீஸாா் கைது செய்தனா்.