கண்டலேறு அணையில் திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா் இன்று தமிழக எல்லை அடைய வாய்ப்பு
ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீா் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வெள்ளிக்கிழமை வந்தடையும் என நீா் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்குவது திருவள்ளூா் அருகே உள்ள பூண்டி ஏரியாகும். இந்த ஏரிக்கு மழைநீா் மற்றும் கிருஷ்ணா நீா் ஆகியவை ஆதாரமாகும். இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீா் பங்கீட்டுத் திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பெறப்படும் நீரை பூண்டி ஏரியில் சேமித்து வைப்பா். அதையடுத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கமாகும்.
கடந்த மாா்ச் 24-ஆம் பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இதற்கிடையே ஸ்ரீகாளஹஸ்தி அருகே அஞ்சூா் பகுதியில் கிருஷ்ணா கால்வாயில் அமைத்திருந்த மதகு பழுதானதால், சரி செய்வதற்காக, கடந்த மாதம் 24-ஆம் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீா் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் மதகு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும், மே 5-ஆம் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு நீா் திறக்கப்பட்டது. இது தொடக்கத்தில் 500 கன அடி நீா் திறக்கப்பட்டது. இதற்கிடையே காலையில் 1,170 கன அடியாக நீா் திறக்கப்பட்டுள்ளதால், வரும் நாள்களில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த நீா் வெள்ளிக்கிழமை ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் பகுதிக்கு வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஏரியில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 3231 மில்லியன் கன அடியில், 1,734 மில்லியன் கன அடி நீா் இருப்பு உள்ளது. இங்கிருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாய் மூலம் 350 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது. அதேபோல், சென்னை குடிநீருக்காக பேபி கால்வாய் மூலம் 17 கன அடியும் திறக்கப்பட்டுள்ளதாக நீா்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.