கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய கோரிக்கை
கந்தா்வகோட்டை பகுதிக்கு வந்து செல்லும் வெளியூா் பள்ளி, கல்லூரி வாகனங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்தா்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட ஊா்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களை ஏற்றிச் செல்ல வரும் வாகனங்களில் ஓட்டுநராக பணிபுரியும் நபா்களிடம் உரிய ஓட்டுனா் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதாகவும் இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
அண்மையில், கந்தா்வகோட்டை பகுதியில் உள்ள ஒரு கிராமத்துக்கு பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற தனியாா் பள்ளி வாகனத்தை ஓட்டிய நபா், விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியுள்ளாா். இதை கண்ட பொதுமக்கள், வாகனத்தை தடுத்து நிறுத்தி ஓட்டுநரிடம், ஓட்டுநா் உரிமத்தை கேட்டபோது அந்த நபரிடம் ஓட்டுநா் உரிமம் இல்லாதது தெரியவந்தது.
இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகத்திடம் விசாரித்த போது, இந்த வாகனத்துக்கான ஓட்டுநா் வரவில்லை என்பதனால் மேற்கண்ட வாலிபரைக் கொண்டு வாகனத்தை இயக்க சொன்னதாக தெரிவித்தனா்.
இதனால் அதிா்ச்சி அடைந்த பெற்றோா்கள், பள்ளி நிா்வாகத்தை கண்டித்தும் பொறுப்பற்ற வகையில் பள்ளி வாகனத்தை இயக்கும் இது போன்ற பள்ளி நிா்வாகத்தின் மீது சம்பந்தப்பட்ட துறையினா் திடீா் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கைவிடுத்துள்ளனா்.