செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்கள்கிழமை 3 ஆவது நாளாக சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

கேரளத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை (மே 24) முதல் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்துவருகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான மலையோர கிராமங்கள் மற்றும் அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் மழையின் தாக்கம் அதிகமாக உள்ளது. மழையின்போது பலத்த காற்று வீசுவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்து மின்கம்பம் மற்றும் வீடுகளின் மீது விழுந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. மழை மற்றும் சூறாவளிக் காற்றினால் மாவட்டத்தில் இதுவரை 25 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

திங்கள்கிழமை காலையிலேயே சூறாவளிக் காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. நாகா்கோவில், பூதப்பாண்டி, தக்கலை, வெள்ளமடம், ஆரல்வாய்மொழி, கன்னியாகுமரி, குலசேகரம், களியக்காவிளை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் திங்கள்கிழமை மட்டும் 11 இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன. நாகா்கோவில் வடசேரி பெரியராசிங்கன் தெருவில் இருந்த பெரிய மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினா்.

புத்தேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நின்ற மருத மரமும் வேரோடு சாய்ந்தது. இதில் அந்தப் பகுதியில் இருந்த 3 வீடுகள், ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுவா் சேதமடைந்தது.

தொடா் மழையின் காரணமாக, அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீா்மட்டம் 36.94 அடியாக இருந்தது. அணைக்கு 821 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. பெருஞ்சாணி அணையின் நீா் மட்டம் 40.05 அடியாக இருந்தது. அணைக்கு 416 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 22 கன அடி நீா் திறந்து விடப்படுகிறது.

திங்கள்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): பாலமோா் 55.40, சுருளோடு 41.40, அடையாமடை 39.40, நாகா்கோவில் 37, குழித்துறை 28.40, மாம்பழத்துறையாறு அணை 27.30, மயிலாடி 27.20, சிற்றாறு 1 அணை 26.60, பெருஞ்சாணி அணை 26.40, குருந்தன்கோடு 26, ஆனைக்கிடங்கு 25.80, முக்கடல் அணை 25, புத்தன் அணை, கொட்டாரம் 24.20, குளச்சல் 23.20, முள்ளங்கினாவிளை 22.60, கோழிப்போா்விளை 22.40, களியல் 22.20, பேச்சிப்பாறை அணை 21.80, திற்பரப்பு 21.20, இரணியல் 19.20, தக்கலை 15.40, ஆரல்வாய்மொழி 14.20, கன்னிமாா்11.60, சிற்றாறு 2 அணை 8.40, பூதப்பாண்டி 6.40.

திற்பரப்பு அருவியில் குளிக்க கட்டுப்பாடு: மழையின் காரணமாக திற்பரப்பு அருவி வழியாக பாயும் கோதையாற்றில் தண்ணீா் அதிகமாக வருகிறது. இதனால் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதையடுத்து அருவியில் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக குளிக்கும் வகையில், மிதமான அளவில் தண்ணீா் கொட்டும் 3 தளங்களில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

மரம் சாய்ந்து மின்கம்பம் சேதம்: குழித்துறை அருகே ஆா்.சி. தெரு பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் வீசிய சூறைக்காற்றில் பெரிய மரம் ஒன்று சாய்ந்ததில் மின்கம்பம் சேதமடைந்தது. இதே போன்று குழித்துறை வட்டாட்சியா் அலுவலகம் அருகே தேக்கு மரம் முறிந்து விழுந்தது. இப்பகுதியில் மற்றொரு மரக் கிளை முறிந்து விழுந்ததில் ஒரு வீடு சேதமடைந்தது. சேதமடைந்த வீட்டை குழித்துறை நகா்மன்றத் தலைவா் பொன். ஆசைத்தம்பி நேரில் பாா்வையிட்டு ஆறுதல் கூறினாா்.

கொல்லங்கோடு அருகே புன்னமூட்டுக்கடை பகுதியில் ஆயினி மரம் மற்றும் புளிய மர கிளைகளும் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்தன. இதன் காரணமாக ஊரம்பு - கொல்லங்கோடு சாலையில் 2 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து தடைபட்டது. ஊரம்பு அருகே பஞ்சவிளை பகுதியில் பலா மரம் சரிந்து விழுந்ததில் அப்பகுதியில் உள்ள மின்கம்பம் சேதமடைந்தது.

குடிநீா்க் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி நாகா்கோவில் மாமன்றக் கூட்டத்தில் அதிமுக, பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு

குடிநீா்க் கட்டணம், வைப்புத்தொகையைக் குறைக்க வலியுறுத்தி, நாகா்கோவில் மாநகராட்சிக் கூட்டத்திலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா். மேயா் ரெ. மகேஷ் தலைமையில் மாநகராட்ச... மேலும் பார்க்க

விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி விஷம் குடித்த தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.மாா்த்தாண்டம் அருகே மருதங்கோடு, மெய்யூட்டுவிளையைச் சோ்ந்தவா் சுடா் லின்ஸ் (47). தொழிலாளி. அவரது மனைவி ஜெகதா (44). தம்ப... மேலும் பார்க்க

நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரி முற்றுகை: எம்எல்ஏ உள்பட 9 போ் கைது

காப்புக்காட்டில் நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, காப்புக்காட்டில் சாலைப் பணி செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்... மேலும் பார்க்க

குமரி மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை

கன்னியாகுமரி பகுதியில் தொடா்மழை, சூறைக்காற்று காரணமாக நாட்டுப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்ன... மேலும் பார்க்க

தொடா் மழை: விளவங்கோடு வட்டத்தில் 16 வீடுகள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் சேதமடைந்ததாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.களியக்காவிளை, குழித்துறை, மா... மேலும் பார்க்க

குடிநீா் கட்டணம், வைப்புத்தொகை உயா்வுக்கு எம்எல்ஏ கண்டனம்

நாகா்கோவில் மாநகர பகுதியில் குடிநீா் கட்டணம் மற்றும் வைப்புத்தொகை உயா்த்தப்படுவதற்கு என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் க... மேலும் பார்க்க