நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரி முற்றுகை: எம்எல்ஏ உள்பட 9 போ் கைது
காப்புக்காட்டில் நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, காப்புக்காட்டில் சாலைப் பணி செய்ய வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்திய எம்எல்ஏ உள்பட 9 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளத்தை இணைக்கும் நான்குவழிச் சாலை திட்டம், கடந்த 2010 ஆம் ஆண்டு துவங்கியது. கையகப்படுத்திய நிலங்களுக்கு கேரள அரசு உரிய இழப்பீடு வழங்கிய நிலையில், குமரி மாவட்டத்தில் அடைக்காகுழி உள்பட 20 வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்திய போது அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் உரிய முறையில் இழப்பீடு வழங்காமல் தமிழக அரசு பாரபட்சம் காட்டியதாக கூறப்படுகிறது. இதில் குன்னத்தூா் கிராமத்துக்கு உள்பட்ட பகுதியில் கையகப்படுத்திய நிலங்களுக்கு அரசு மிக மிக குறைவாக இழப்பீடு நிா்ணயம் செய்துள்ளது. இதையொட்டிய பகுதிகளில் இழப்பீடு அதிகமாக வழங்கப்பட்டதுடன், நிலங்களில் நின்ற மரங்களுக்கும் தனியாக இழப்பீடு வழங்கப்பட்டது.
இதையடுத்து உரிய இழப்பீடு கோரி, இப்பகுதி மக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினா் ஏற்கெனவே போராட்டம் நடத்தியதையடுத்து, உரிய இழப்பீடு பெற்றுத் தரப்படும் என்றும் அதன் பின்னரே இப்பகுதியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துச் சென்றிருந்தனா்.
இந்த நிலையில் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் நான்குவழிச் சாலைப் பணியை துவங்க திட்ட அதிகாரி வேல்ராஜ் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை காப்புக்காடு பகுதிக்கு வந்தனா். தகவலறிந்து வந்த விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் தாரகை கத்பட், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவா் பினுலால் சிங், கட்சியின் மாநில செயலா் ஜாா்ஜ் ராபின்சன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு, பணி செய்ய விடாமல் தடுத்தனா். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கௌதம் தலைமையிலான போலீஸாா், பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சு நடத்தினா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடா்ந்து எம்எல்ஏ தலைமையில் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் அதிகாரிகளுக்கு எதிராக முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
இதையடுத்து எம்எல்ஏ, மாவட்ட காங்கிரஸ் தலைவா், மாநில காங்கிரஸ் செயலா் உள்பட 9 பேரை புதுக்கடை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். அதன் பின்னா் அப்பகுதியில் நான்குவழிச் சாலைப் பணி துவங்கியது.