குமரி மாவட்ட மீனவா்கள் 3-ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை
கன்னியாகுமரி பகுதியில் தொடா்மழை, சூறைக்காற்று காரணமாக நாட்டுப்படகு மீனவா்கள் 3-ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், காற்று வேகமாக வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான நாட்டுப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கன்னியாகுமரி, வாவத்துறை, சின்னமுட்டம், ஆரோக்கியபுரம், கோவளம், கீழமணக்குடி உள்ளிட்ட கிராமங்களில் நூற்றுக்கணக்கான நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து மீன்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் மீன்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.