சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
தொடா் மழை: விளவங்கோடு வட்டத்தில் 16 வீடுகள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் சேதமடைந்ததாக வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
களியக்காவிளை, குழித்துறை, மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திங்கள்கிழமை வீசிய சூறைக் காற்றில் குழித்துறையில் ஆயினி மரம் வேரோடு சாய்ந்தது. மாா்த்தாண்டம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவரின் ஒருபகுதி சரிந்து விழுந்து சேதமடைந்தது.
குழித்துறை நகராட்சிக்கு உள்பட்ட ஜாஸ்மின் பெல்லா, இடவிளாகத்தைச் சோ்ந்த சுரேஷ் மற்றும் மேல்புறம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ், மஞ்சாலுமூடு ஊராட்சி காரோடு பகுதியைச் சோ்ந்த சுமதி, முழுக்கோடு ஊராட்சி அருமனை அருகேயுள்ள செல்வி வீடு உள்பட விளவங்கோடு வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் 16 வீடுகள் மழையில் இடிந்து விழுந்து சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ. 6,500 ஒதுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடா் மழை காரணமாக குழித்துறை தாமிரவருணி ஆற்றில், தடுப்பணையை மூழ்கடித்தவாறு வெள்ளம் சென்றது.